பட்டா பெயர் மாற்றம் மட்டும் போதாது! சிட்டா, அ-பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யபட வேண்டும்!

Please follow and like us:
onpost_follow

பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்குமுதல், பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும் மனுவை இணைத்து அனைத்தையும், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது.

இப்போது அம்முறை மாறி,  ஆன்லைன் முறையில் பட்டா மனு செய்யும் வேண்டி உள்ளது, இதற்காக மனு கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள் ). E.சேவை மையங்கள் மூலமாக மனு செய்ய படுகிறது. (கரண்ட் இல்லை, சர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை, சார்/மேடம்  லீவு, என்று பல இடர்களை தாண்டித்தான் மனு விண்ணப்பிக்கப்பட்டு, ரசீது பெறப்படுகின்றது.)

பின்னர்  ஆன்லைன் மூலம் மனு செய்த ரசீதை எடுத்து கொண்டு பட்டா வாங்க போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகலையும் எடுத்து கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அதிகாரியையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து, பின் தொடரல் வேண்டும். VAO, சர்வேயர், தலைமை சர்வேயர் – தாசில்தார் என அனைத்து டேபிளுக்கு பேப்பரை நகர்த்துவதும் நாம் தான் செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகர் (VAO), சர்வேயர் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு  ஆன்லைனில் நிலுவையில் மனு எதுவும் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது  எனவே ஆன்லைனில் பட்டா மனு செய்துவிட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ மனுக்களை ஆன்லைனிலே தள்ளுபடி செய்து விடுவார்கள். மனு தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்களையும் சொல்லி இருப்பார்கள். அவ்வாறாயின் ஆன்லைன் மூலம் மீண்டும் மனு செய்தல் வேண்டும்.

பட்டா மாற்றம் கோரும் மனுவினை, முழு புலம் கொண்ட இடங்கள், உட்பிரிவு கொண்ட இடங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். முழுபுலம் கொண்ட இடங்களின் (எளிய புரிதலுக்காக, ”கூட்டுப்பட்டா” என்று வைத்து கொள்ளுங்கள்) மனுக்கள் ஆன்லைனில் VAO விடம் சென்றுவிடும். உட்பிரிவு இடங்கள் (எளிய புரிதலுக்காக, ”தனிப்பட்டா” என்று வைத்து கொள்ளுங்கள்) ஆன்லைனில் சர்வே பிரிவுக்கு  சென்றுவிடும். VAO விடம் வந்த முழுபுலம் பட்டா பெயர் மாற்றங்கள் மனுவினை அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்து, கிராம கணக்குகளையும் திருத்தம் செய்து விடுகின்றனர், அதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.

சர்வே பிரிவுக்கு செல்லும் உட்பிரிவு மனுவினை தலைமை சர்வேயர் அனுமதி பெற்று, சர்வேயர் ஒருவர் நேரடியாக களத்திற்கு வந்து, இடத்தை சரி பார்த்துவிட்டு உட்பிரிவு பட்டாவுக்கு வழிவகை செய்வார். உட்பிரிவிற்கான வேலைகளை செய்த உடன், சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு – FMB களில் , சிட்டா, கிராம கணக்குகளில் உட்பிரிவை குறித்தல் வேண்டும், ஆனால் சில நேரங்களில் இது விடுபட்டுப்போகின்றது.  அவ்வாறானால்  பட்டா, உட்பிரிவு ஆன்லைனில் மாற்றம் செய்ய பட்டாலும், கிராம கணக்கில் பட்டா மாற்றமே நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும். VAO க்கு பட்டா மாறிய விசயமே தெரியாது போய்விடுகிறது. உட்பிரிவு இடங்களின் கிராம கணக்குகளை சர்வேயர் தான் திருத்தும் செய்ய வேண்டும், VAO வுக்கு அந்த உரிமை இல்லை,  ஆகையால் சர்வேயரிடம் அதனை கேட்டு வலியுறுத்துதல் வேண்டும் –  இதில் கவனம் செலுத்துதல் அவசியம்.

வீடு கட்ட, வங்கி கடன் வாங்க, பயிர் கடன் வாங்க, பயிர் இன்சூரன்ஸ்க்காக , வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, VAO கையெழுத்துடன்- அ – பதிவேடு, சிட்டா தேவைபடும் அப்பொழுது அதனை கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் திருத்தும் செய்யாமல் இருப்பின் அல்லல் படும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் FMB , அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதனை செய்தல் / சரிபார்த்தல் நலம். சில ஊர்களில் அ – பதிவேட்டினையும், FMB யும் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கலாம்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp